மருதநாயகத்தின் மரணத்திற்குப் பின்
மருதநாயகத்தின் மரணத்திற்குப் பின்
ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும், இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையிலான பதவிச் சண்டையில் மருதநாயகத்தின் வீரமும் திறமையும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
ஆங்கிலேயர்கள் போரில் பெரும் வெற்றி பெறக் காரணமான மருதநாயகத்துக்கு, 1756 இல் மதுரை திருநெல்வேலி என்னும் இரு பகுதிகளில் ராணுவ அதிகாரியாக இருக்கும் பொறுப்பு கிடைத்தது. மருதநாயகத்தின் ஆட்சியில் மதுரை புதுப்பொலிவு பெற்றது. மக்களுக்குப் பல நன்மைகளையும் செய்த இவர், ஜாதி மத பாகுபாடு இன்றி அனைவரிடமும் அன்போடு பழகிய பண்பாளர். இத்தகைய வீரன் தன்னைச் சூழ்ந்து இருந்தவர்களின் சதியினால், தூக்கிலிடப்பட்டான். இந்த மாவீரனின் மரணத்துக்குப் பின், நிகழ்ந்தவை பற்றிய நிகழ்வுகளைக் கதைக்களம் ஆக்கியுள்ளது இந்நாவல்.
கௌமா என்னும் இக்கதையின் நாயகி, மருதநாயகத்தின் வளர்ப்பு மகளாகக் காட்டப்பட்டு, அவள் மூலம் இக்கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. கௌமா, மருதநாயகத்தின் மனைவி, மகனைப் பகைவரி மிருந்து மீட்டெடுப்பது, பொக்கிஷங்களைப் பகைவரிடமிருந்து காப்பது, ஆங்கிலேயர்களுக்கு எதிரான செயல்களை வீரத்துடன் செய்வது என ஒரு வீரமிக்க நாயகியைக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். மார்க்சந்த், தாமோதரன் முதலான பலரையும் பழிவாங்கும் கௌமாவுக்கு ஒரு இஸ்லாமிய இளைஞன், ஒரு உடன்பிறவா சகோதரன், தந்தை முதலான பலரும் துணையிருக்கிறார்கள். நவாப்பிடம் பணிபுரிந்து கொண்டே அவருக்கு எதிரான செயல்களைச் செய்யக்கூடிய கௌமா, ஆயூப்கான் இவர்களின் சாகசங்கள் இக்கதையில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரு மாவீரனின் மரணம் நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கியது என்பதை வரலாற்றுடன் கற்பனை கலந்து நாவலாக வடித்துள்ளவர், பல வரலாற்று நாவல்களைப் படைத்து தங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான வரலாற்று நாவலாசிரியர் லிங்கராசா. இவரது இந்நூலை எமது பதிப்பகம் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
மருதநாயகத்தின் மரணத்திற்குப் பின் - Product Reviews
No reviews available

