108 திவ்ய தேச உலா-பகுதி-3

108 திவ்ய தேச உலா-பகுதி-3
ஒரு பக்தர் குறிப்பிட்ட ஒரு கோயிலுக்குப் போய்வந்து தன் அனுபவத்தைப் பிறரிடம் விவரிப்பார். அதைக் கேட்பவர்களில் ஒருவர் ஏற்கெனவே அந்தக் கோயிலுக்குப் போய் வந்திருப்பவர். அவர், ‘அடடா, நீங்கள் குறிப்பிடும் அந்த சந்நதியை நான் பார்க்கவில்லையே, எப்படித் தவறவிட்டேன்!’ என்று கேட்டு அந்த தன் துர்பாக்கியத்தை நொந்துகொள்வார். வேறு சிலர், அந்தக் கோயிலுக்குப் போவது எப்படி, எங்கே தங்குவது, சரியான உணவு கிடைக்குமா, போக்குவரத்து வசதிகள் உண்டா என்றெல்லாம் தத்தமது சந்தேகங்களைக் கேட்பார்கள். போய் வந்தவர் தன் அனுபவத்தை ஒட்டி இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து வைப்பார். இது, வாய்வழியாக ஒருசில பேரை மட்டுமே எட்டும் தகவல்கள். 108 திவ்யதேச உலா - மூன்றாம் பாகமும் மேலே குறிப்பிட்ட அனுபவஸ்தர் போலத்தான். நேரடியாக அந்தந்த திவ்யதேசக் கோயில்களுக்குச் சென்று, அவர்கள் அனுமதிக்கும் சந்நதிகளைப் படங்கள் எடுக்கச் சொல்லி, அந்தந்த ஊரிலிருக்கக்கூடிய வயது முதிர்ந்த பெரியவர்களிடம் கூடுதல் தகவல் கேட்டு, சந்தேகங்களுக்குத் தெளிவு பெற்று, சில புத்தகங்களை ஆராய்ந்து, விவரம் சேகரித்து, எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். தினகரன் நாளிதழில் சனிக்கிழமை இலவச இணைப்பான ஆன்மிக மலரில் வாரந்தோறும் பிரபுசங்கர் எழுதி, தொடர்ந்து வெளியான 108 திவ்யதேச உலா கட்டுரைகள் லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்று சேர்ந்தது. அவர்களின் ஏகோபித்த கோரிக்கையின் பேரில் ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளியாகி, ஆயிரக்கணக்கான வாசகர்களின் அமோக பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. இந்த மூன்றாவது பாகமும் உங்களுடைய ஆன்மிகப் பசிக்கு ஏற்ற அறுசுவை விருந்தாக அமையும் என்பது திண்ணம். அபூர்வமான புகைப்படங்களும் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன. பரவசத்தோடு வழிபட வண்ணப்படங்களும் உண்டு.