தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை

தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை
பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் எழுதியது.
“ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு” என்று ஐ.நா.சபை குடும்பத்துக்கு விளக்கம் தருகிறது.ஆனால் குடும்பம் அந்தக் கூரையோடு மட்டுமில்லை.மறித்து எழுப்பப்பட்ட சுவர்களோடும்,எல்லைகளைக் குறுக்கும் வேலிகளோடும்தான் இருக்கிறது என்கிற வரிகளில் வேகம் பிடித்து நகர்கிற இப்புத்தகம் மிகவும் இயல்பான ஆனால் அடர்த்தியான அதேசமயம் கூர்மையான வரிகளில் குடும்பம் பற்றியும் தமிழர் வரலாற்றில் திருமணங்கள் அடைந்து வந்துள்ள மாற்றங்கள் பற்றியும் அம்மாற்றங்களுக்கான சமூகப் பின்புலங்கள் பற்றியும் பேசுகிறது.ஆழமான ஆய்வுதான் என்றாலும் அலுக்காமல் படிக்க வைக்கும் அனுபவ வார்த்தைகளால் புத்தகம் மிளிர்கிறது.தலை நரைச்ச கிழவனுக்குத் தாலி நான் கட்டமாட்டேன் என்று பெண் அடம் பிடித்துவிடாமலிருக்க கல்யாணத்தின் போது மணமகளைக் கண்ணைப் பொத்தி மேடைக்கு அழைத்து வரும் ஒரு சாதிப் பழக்கத்திலிருந்து பீட்சாவுக்கும் பர்கருக்கும் பழகிவிட்ட இந்திய இளைஞர்கள் கல்யாணம் என்று வந்துவிட்டால் மட்டும் தங்கள் நவீன மனதை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஜாதி,ஜாதகம் என்று பாய்ந்துவிடும் வீழ்ச்சி வரையிலும் திருமணங்கள் எப்படிப் பெண்ணுக்குப் பாரபட்சமாக காலந்தோறும் இருந்து வருகின்றன என்பதை தகுந்த ஆதரங்களோடும் வாசக மனதில் உறைக்கும் விதமாகவும் இப்புத்தகம் பேசுகின்றது.தமிழ் அடையாளங்கள் என்று எதுவும் தமிழர் திருமணங்களில் இல்லை.மனிதநேய அடையாளங்களாவது மிஞ்ச வேண¢டுமே என்கிற நியாயமான கவலையோடு புத்தகம் முடிகிறது.