ஜெப்னா பேக்கரி
ஜெப்னா பேக்கரி
இயக்கம் தன்னை பிடித்துக் கொண்டு போன அன்று, பேக்கரியில் தான் செய்து அடுக்கியிருந்த பதினெட்டு மரக்கறிப்பணிஸ்களை சிரிப்புடனும் கண்களில் நீருடனும் நினைத்துப் பார்ப்பதுடன், தனக்கும் மச்சாளுக்கும் இரு பணிஸ்களை வாங்க வாடிக்கையாக வந்து நிற்கும் அரவிந்தன் இப்போதெல்லாம் என்ன செய்வான் என்று கவலைப்படும் சிவா.
தான் பிறவியெடுத்தது பொன்னுத்துரையர், ராசாமணியர், விசுவர், முத்துலிங்கத்தார் நால்வரின் மிளகாய்த் தோட்டங்களை பத்திரமாய் பாதுகாக்கவும், கற்கள் எறிந்து கிளிகளை கலைக்கவும் இருக்குமோ என்றென்னும் வண்ணம் வாழ்வின் மீது யாதொரு புகாரும் இல்லாமல் இருக்கும் கொசுணாமணியர்.
நல்லது செய்ய செய்ய அல்லதாய் மாறி வரும் தொந்தரவுகளை சமாளித்தபடி, தனது ஆற்றாமையையும் சேர்த்து தீர்த்துகொண்டு துக்க வீடுகளில் திருவாசகம் படிக்கும் திருலிங்கத்தார்.
ஷர்மியின் துயிலெழுகையில் ஆரம்பிக்கும் நாவல், ஷர்மியின் அம்மா, ஷர்மியின் படத்திற்கு முன்பாக குத்துவிளக்கு ஏற்றிவைக்கையில் நிறைவுருகிறது. இடையில் எத்தனை எத்தனை வெளியேற்றங்கள், குடியேற்றங்கள்,துரோகங்கள், சந்தேகங்கள்.
1990ம் ஆண்டு முஸ்லீம்கள் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நிகழ்வின் பிண்னணியை அடிப்படையாக கொண்ட நாவல் என்பதால் தனிப்பட்ட முறையில் தான் இழந்தவை குறித்தும், தனக்கு எதிரான மிரட்டல்கள் தொடர்வதைப் பற்றியும் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
குண்டு வீச்சில் ஒரு பக்க பெருங்கிளை கருகித் தொங்கினாலும், கொஞ்சம் நிழலை நித்தமும் தந்தபடி, ஜெப்னா பேக்கரிக்கு எதிரில் மௌன சாட்சியாய் நின்றிருக்கும் அரசமரம்.
ஆயுளை அதிகரிக்க, புட்டு அவிக்கும் ஓலைப்பெட்டியில், பக்குவமாய் அவித்தெடுக்கப்படும் பேட்டரிகள்.
இயல்பு சித்திரங்கள். ஒருவரின் கவனமும் இன்றி, அடிக்கின்ற காற்றுக்கு புரண்டு புரண்டு படுக்கும் , தையல் இயந்திரத்தின் சிறு வெட்டுத் துண்டுகள்.
அரைமண்டை என்ற கதாபாத்திரம் சிறு வெட்டுத்துண்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்து கை பெருவிரலில் சுற்றிக்கொள்வதும், பெருவிரலை மேல் நோக்கி நீட்டி, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் நேராக நீட்ட, வர்ணங்கள் குழைந்திருந்த பெருவிரல், உலக நாடுகள் எல்லாம் ஒன்றாகி ஒற்றை துவக்கை நீட்டியது போல் தோற்றமளிக்கும் சித்திரம்.
வாழ்நாளில் பெரும்பகுதியை ரேடியோ ரிப்பேர் செய்வதிலும், அலைவரிசைகளின் கரகரப்பை கேட்பதிலும் செலவிடும் ஹமீது.
”ஓடு மாற்றவேண்டும் தம்பி” என்று வீடே மரியாதையாக இருக்கும் கல்வீடும், முற்றத்தில் தினமும் விரிந்தெழும் செம்பருத்தியும் அரைமண்டையின் நித்தப்படி செயல்களில் மாற்றங்கள் எதும் இல்லாவண்ணம் பார்த்துக்கொள்ளும் அமைதி சூழல்.
கேட்பாரற்ற சிறு வெட்டுத் துண்டுகளாய் நாவல் முழுவதும் விரவியிருக்கும் கதைமாந்தர்கள் பலர், அவகாசமின்றி தமக்கு முன்னால் நீட்டப்படும் ஒற்றை துவக்கை கண்டு துவண்டு போகிறார்கள்.
பாணுக்கு பருப்பும் சம்பலும் வைத்துக் கொண்டு விஸ்ராந்தையாக உணவுண்ணும் பொன்னுத்துரையர், வெறும் சோற்றை அள்ளி வாயில் திணித்து, நெஞ்சை நீவிக்கொள்ளும் நிலை.
ரேடியோவின் அத்தனை சிக்கலான வயர்பின்னல்களுக்குள்ளாக சென்றி வரும் தனது ஸ்குறூட் றைவர் போல, வாழ்வின் அத்தனை சிடுக்குகளையும் புன்முறுவல் பூத்தபடி கடந்து செல்லும் ஹமீது, கிழக்கு மாகானத்தின் உள்ளுடைந்த கிராமம் ஒன்றில் இருந்து, கொழும்புக்கு வெளியேற நேரிடுகையில், நண்பரிடம் தனது பச்சை நிற பெயிண்ட் அடித்த சைக்கிளையும், தனது ரேடியோ கடை சாவியையும் கையளித்துக் கிளம்புகிறார்.
இயக்கத்தின் ஒவ்வொரு சோதனை சாவடிகளை கடக்கையிலும் பொன்னும்,பொருளும், பணமும் கைவிட்டு நீங்கும் நெடிய பயணம்.
அத்தனை இக்கட்டுகளுக்கு இடையிலும், மனம் நசீருக்கு, வெள்ளை சாறத்தை இரு மடிப்பாக்கி வடிவாய் கட்டிவிடும் தருணம். துக்கத்தினூடான சிறு சந்தோசத்தை அளிக்கும். ஹமீது தனது மகன் நசீருக்கு ஆசையாய் வாங்கித்தந்திருந்த சிகப்பு நிற ரேடியோ பெட்டியை “கொண்டு போகேலாது…” என்று இயக்க பெடியன்கள் பிடிவாதம் பிடிக்க, நிலத்தில் ஓங்கி எறிந்து உடைத்தெரியும் ஹமீது.
செய்யாதே என்று சொல்வதையெல்லாம் செய்துவைக்கும் போர் அறிவு.
வாப்பா தனக்கு வெள்ளை சாரத்தை கட்டிவிட ஏதுவாக இரு கைகளையும் தூக்கி பறப்பதுபோல் மகிழ்வாய் நின்றுகொண்டிந்த நசீர், வாப்பா தனது ஆசை ரேடியோவை உடைப்பதை அழாமல் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய சூழல். அடுத்தடுத்து இன்னும் பல நிகழ்வுகளை மகன் நேரடியாக சந்திக்க கூடும் என்பதால் நசீரை சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத ஹமீது.
மீண்டு வருவோம் என்ற எதோவொரு நம்பிக்கையில், சைக்கிளையும், கடை சாவியையும் நினைத்தபடி நடையில் வேகத்தை கூட்டும் ஹமீது.
முட்டைவடிவத்தில் சேற்றுநீர் தேங்கி நிற்கும் பலாமரமும், வீட்டின் விறாந்தையில், மரக்கதிரைகளின் மேலாக சுவற்றில் தொங்கும் அரைமண்டையின் ஆச்சியின் கருப்பு வெள்ளை படம். ஆச்சியின் படத்திற்கு இடமும் வலமுமாக, அடிக்கப்பட்டு இருக்கும் இரு ஆணிகள், முன்பொருநாள் படங்கள் இருந்ததை அடையாளப்படுத்தியபடி இருக்கிறது.
மண்ணின் வேராய் இருந்த மனிதர்கள் வெளியேற்றப்படுவதை, பலாமரமும், அவ்விரு ஆணிகளும் மௌன சாட்சியாய் பார்த்தபடியே இருக்கின்றன.
– நன்றி திரு. யோகேஸ்வரன் ராமநாதன்
ஜெப்னா பேக்கரி - Product Reviews
No reviews available

