FD vasai-man-55874.jpg

வசை மண்

0 reviews  

Author: ஆர்.சிவகுமார்

Category: புதினங்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  390.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வசை மண்

அயர்லாந்து எழுத்தாளரான மார்ட்டீன் ஓ’ கைனின் ‘வசை மண்’ நாவல் நவீன ஐரிஷ் இலக்கியத்தின் ‘கிளாசிக்’காகக் கருதப்படுகிறது. மூலமொழியில் 1949இல் வெளியான இந்நாவல் பெரும் இலக்கியச் சாதனை என்ற புகழையும் அராஜகப் பிரதி என்ற நெருங்க முடியாத தன்மையையும் ஒரே சமயத்தில் பெற்றது. எனினும் ஐரிஷ் தவிர்த்த வேறு மொழி வாசகர்களுக்கு ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக் காலம் இந்தப் படைப்பும் படைப்பாளியும் அறியப்படாதவர்களாகவே இருந்தார்கள். 2015, 2016ஆம் ஆண்டுகளில் வெளியான இரண்டு ஆங்கில மொழியாக்கங்களே மார்ட்டீன் ஓ’கைனை உலகின் முக்கியமான நாவலாசிரியர்கள் வரிசையில் அமர்த்தின. ஜானதன் ஸ்விஃப்ட், ஆஸ்கர் வைல்ட், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஆகியோரின் ஐரிஷ் அங்கத மரபிலும் வில்லியம் பட்லர் யேட்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவல் பெக்கெட் ஆகியோரின் ஐரிஷ் இலக்கிய மேதைமை வரிசையிலும் இந்நாவல் மூலம் மார்ட்டீன் ஓ’ கைன் இயல்பாகப் பொருந்துகிறார். பூமிக்கு மேலே முடிந்துபோன வாழ்க்கையின் சச்சரவுகள் கூடுதல் தீவிரத்துடன் பூமிக்குக் கீழேயும் தொடர்கின்றன. ஓரிருவர் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் மரித்தவர்கள்தாம். ஏமாற்றமும் அவமானமும் பொறாமையும் பூசலும் நிரம்பிய கொந்தளிப்பான ஒரு பெண்ணை மையமாக வைத்து நகர்கிறது நாவல். கவித்துவமும் துள்ளலும் ஒரு முனையில், வசையும் கொச்சையும் மறு முனையில் என்ற உயிரோசை கொண்டது நாவலின் மொழி. ஒரு சிறு நகரத்தின் வாழ்க்கை நிகழ்வுகளை அவற்றைக் கடந்த பெரிய உலகத்தின் உயிர்த் துடிப்புள்ள சித்திரமாக விரிக்கிறது நாவலாசிரியரின் கலை விகாசம். சிறுகதைகளும் வேறு இரண்டு நாவல்களும் எழுதியுள்ள மார்ட்டீன் ஓ’ கைனின் சில படைப்புகள் அவருடைய மறைவுக்குப் பின்பே வெளியாயின. நார்வேஜியன், டேனிஷ், ஜெர்மன், பிரெஞ்சு, செக் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள ’வசை மண்’ இந்திய மொழிகளில் தமிழில்தான் முதலில் வெளியாகிறது.

மார்ட்டீன் ஓ’ கைன்

மார்ட்டீன் ஓ’ கைன் (1906 – 1970) நாவலாசிரியர் மார்ட்டீன் ஓ’ கைன் 1906இல் மேற்கு அயர்லாந்தின் கடற்கரை நகரமான கன்னிமாரா பகுதியில் பிறந்தார். உள்ளூர்ப் படிப்புக்குப் பின் கல்வி உதவித் தொகை கிடைத்துத் தேசிய அந்தஸ்து கொண்ட பள்ளி ஆசிரியரானார். பிறகு டப்ளினிலுள்ள புனித பேட்ரிக்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்று மீண்டும் சொந்த ஊர்ப் பகுதியிலிருந்த சில பள்ளிகளில் பணிபுரிந்தார். தடைசெய்யப்பட்டிருந்த ஐரிஷ் குடியரசு ராணுவத்தில் உறுப்பினராக இருந்ததால் இரண்டாம் உலகப் போரின்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதன்பிறகு, அயர்லாந்து நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரானார். 1956இல் டப்ளின் டிரினிடி கல்லூரியில் ஐரிஷ் மொழித் துறை விரிவுரையாளராக நியமனம் பெற்ற அவர் 1969இல் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1970இல் மறைந்தார். மிகப் பிரபலமான ‘வசை மண்’ (1949) அன்றி அவர் எழுதிய ‘Athnuachan’ (1997), ‘Barbed Wire’ (2002) என்ற இரண்டு நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகள் சிலவும் அவருடைய மறைவுக்குப் பின் வெளியாயின. நவீன ஐரிஷ் இலக்கியத்தின் பிதாமகராக மதிக்கப்படுபவர்.

வசை மண் - Product Reviews


No reviews available