நான்காம் ஆசிரமம்

நான்காம் ஆசிரமம்
காவிய, புராணக்கதைகள் மீது புதுப்பார்வை செலுத்தும்போது அவற்றைக் கதைகளாய் மட்டும்தான் பார்க்கமுடியும். பாத்திரங்களை மானிடர்களாக மட்டும்தான் அணுக முடியும். அவதாரம் போன்ற தெய்வீகக் கருத்துக்களை அதில் கொண்டுவர முடியாது என்று சொன்னவர் ஆர்.சூடாமணி. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், பெண்களின் துயரப்பாடுகள், மனித மனத்தின் இயல்புகளை தன் படைப்புக்களில் விவரித்தவர் இவர். 1954-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை 50 வருடங்கள் எழுத்தோடு வாழ்ந்த சூடாமணி சுமார் 574 சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு சிறுபத்திரிகைகளிலும், ஆனந்த விகடன் உட்பட பல்வேறு ஜனரஞ்சக பத்திரிகைகளிலும் இவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. கதாபாத்திரங்களை யதார்த்தமாக வடிப்பதில் சூடாமணி கைதேர்ந்தவர். ‘நான்காம் ஆசிரமம்’ என்ற கதையின் கோணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத, சொல்ல முயற்சிக்காத கோணம் என்றால் அது மிகையாகாது. பெண் தன்னுடைய சுதந்திரத்திற்காக யாரை எதிர்பார்க்க வேண்டும்? பெண்ணின் இளமை தொட்டு, முதுமை வரை அவள் மேற்கொள்ளும் பயணத்தில் பல்வேறு தடைக்கற்கள். அவள் சந்திக்கும் ஆண்கள் அவளுக்கான சுதந்திரத்தைப் போற்றுகிறார்களா? என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. எழுபதுகளின் தொடக்கத்தில் பெண்களின் சுதந்திரத்தை புதிய கோணத்தில் வலியுறுத்தியவர் ஆர்.சூடாமணி. இவர் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர். எழுத்துக்கும், வாழ்வுக்கும் இடைவெளி இல்லாத படைப்பாளி இவர். அவர் இறக்கும் போது (2010-ம் ஆண்டு) தன்னுடைய 11 கோடி ரூபாய் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக உயில் எழுதி வைத்தார். அதன்படி அவரது சொத்துக்கள் தொண்டு நிறுவனங்களுக்குப் போய்ச் சேர்ந்தன. கதைகளிலும் மட்டுமல்ல பொதுவாழ்விலும் புரட்சி செய்தவர் ஆர்.சூடாமணி. இவரது படைப்புக்களை இலக்கிய சிகரங்கள் வரிசையில் வெளியிடுவதை எமது விகடன் பிரசுரம் பெருமையாகக் கருதுகிறது. போற்றத்தக்க எழுத்தாளரின் காலத்தை வென்ற கதைகளை தமிழ் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.