மரணத்தின் கதை: நக்சல் மண்ணில் கனவுகளும் நிராசைகளும்

மரணத்தின் கதை: நக்சல் மண்ணில் கனவுகளும் நிராசைகளும்
நக்சல்பாரிகள் எனக் குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு ராணுவ, காவல் படையினருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் நடந்துவரும் போரைக் குறித்த நேரடிப் பதிவுகளைக் கொண்ட நூல் இது. நக்சல் பிரச்சினை குறித்து நாளிதழில் செய்திக் கட்டுரை எழுதுவதற்காகக் காடுகளுக்குச் சென்ற இதழியலாளர் ஆசுதோஷ் பரத்வாஜ் வனாந்தரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்நூலில் பதிவுசெய்கிறார். புனைகதை எழுத்தாளருமான ஆசுதோஷ் பரத்வாஜ் பின்நவீனத்துவ நாவலைப் போன்ற வடிவத்தில் வனத்தின் சிக்கலான யதார்த்தங்களைப் பதிவுசெய்திருக்கிறார். போரும் அதில் ஈடுபடும் மனிதர்களும் அதில் ஈடுபடாமலேயே பாதிக்கப்படும் அப்பாவிகளும் நூல் முழுவதும் வெளிப்படுகிறார்கள். நக்சல் பிரச்சினையின் தன்மைகள், அதிலுள்ள நுட்பமான சிக்கல்கள், அரசு அணுகுமுறையில் உள்ள பிரச்சினைகள், பழங்குடி இன மக்களின் வாழ்வியல் எனப் பல்வேறு கூறுகளையும் தழுவியபடி விரியும் இந்தப் பதிவுகள் வாசகரை மாறுபட்ட நிலப்பரப்பிலும் சிந்தனைப் பரப்பிலும் பயணிக்கவைக்கின்றன.