ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்
ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவரும் (எங்கள் மாவட்டக்காரர் என்பதால் ஊர்ப்பாசத்தில் இதை முதலில் குறிப்பிடுகிறேன்) 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது பெற்றவருமான லட்சுமிஹர் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பான 'ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்' இப்போதுதான் வாசிக்க நேர்ந்தது.
மனம் ஒரு நிலையில்லாமல் பற்றுக்கோடின்றி தவிக்கும்போது, ஓர் உன்மத்த நிலையில் உறைந்து விடும் போதோ அல்லது சிதைவுற்று அலைவுறும்போதோ, பெரும் போதையின் பின்னான இரவுகளின் போதோ, தன்னகங்காரம் படிந்த கடும் மோதல்களுக்குப் பின்னான வெறுமைப் பொழுதுகளிலோ, தன்னிரக்கம் ததும்பி கண்நிறைந்து மனம் கனக்கும் பொழுதுகளிலோ, பனுவல்களை வாசித்து முடித்ததும் ஏற்படும் தவிப்புகளிலோ, மன அவசங்களிலோ நீளும் எண்ணங்கள், உருவாகும் கற்பனைகள் - கற்பனாதீதங்கள் - விசித்திரமானவையும், இயல்பு நிலை திரிபுற்றதாயும், அதுவரைக்குமான பொருள்கோடலை மறுதலித்து அர்த்தமிழந்து அனர்த்தங்களாய் மீளும் உணர்வுகளை/எண்ணங்களை அப்படியே எழுத்தில் வடிக்க முடியுமா?
எனக்குப் பல முறை கக்கூஸ்களிலும் மலக்கிடங்குகளிலும் மேலெங்கும் மலம் ஈசிக்கொண்டிபடியும் வசிப்பிடம் உள்ளிட்ட வெளிகளில் கழிவுகளுடன் உள்ளிழுக்கப்பட்டு அதிலிருந்து வெளியேற முடியாமல் மூச்சு முட்டிய சந்தர்ப்பங்கள் நேர்ந்திருக்கிறது.
வழமையான புழங்கு வெளிகளில் வழக்கத்திற்கு மாறான உருமாற்றங்களுடன் தலைவீங்கி நெற்றியில் கண்கள் முளைத்த இன்னதென்று வறையறுக்க இயலாத அகோர உருவங்கள் குழந்தைகளாய், பெண்களாய், ஆண்களாய் எனைச் சுற்றி வளைத்து கடும் அதிர்ச்சிக்கும் பயத்திற்கும் உள்ளாக்கியவாறு என் கைகளையும் கால்களையும் பிடித்திழுத்து என்னை அவ்விடத்தில் இருந்து வெளியேற விடாமல் ஸ்தம்பிக்கச் செய்துள்ளன.
மூடிய கண்களுள் எலும்புகளால் ஆன ஆறுகால் நாய்களும் (அப்படித்தான் நினைக்கிறேன்..) ஓங்கி வளர்ந்த சாண்ட்லியர் வகை எலும்பு உருவங்களும் என் படுக்கைக்கு மேலே ஆடியும் என் அறைக்குள்ளே ஓடியாடியும் என்னை அச்சுறுத்தி நெஞ்சுவலி ஏற்படுத்தியுள்ளன.
நெருங்கிய உறவுகள்/நட்புகள் அகால வேளைகளில் என்னைக் கைவிட்டுச் சென்றிருக்கின்றன - அகால மரணமுற்று என்னைத் தவியாய்த் தவிக்க விட்டுள்ளனர். உறவின் சிடுக்குகள் குறித்து நீண்ட உரையாடல்கள் அரூப மாந்தர்களுடன் நிகழ்ந்திருக்கின்றன. வாழ்வின் அபத்தங்கள் குறித்து தன்னாலேயே தனக்குள் உரையாடிக் கொண்ட பொழுதுகளும் வாய்த்திருக்கின்றன. என் ஆற்றாமையை பிறர் மீது ஏற்றி அவர்களுக்காக மவுனமாய் கண்ணீர் சிந்துவதும் நேர்ந்திருக்கின்றன. அப்போது மகனாகவும் வாழ நேரிடும் - மனைவியாக வாழ நேரிடும் - மரணித்த நண்பனாகவும் வாழ நேர்ந்ததுண்டு.
மேற்சொன்ன உணர்வுகளை / நிலைகளை / எண்ணங்களை / கற்பனைகளை எழுத்தில் - கலை இலக்கியத்தில் கொண்டு வந்தால்...
நவீன ஓவியக் கலை வரலாற்றில் குறிப்பிடப்படும் மனத்தாக்கப்பதிவியம் (Impressionism), மீமெய்ம்மையியல் (Surrealism) என்ற வகைப்பாடுகளை அப்படியே எழுத்துக்கும் பொருத்துகையில் நான் மேற்சொன்ன எனது உணர்வுநிலை, ஆழ்மன உருவகங்கள் - புனைவாகவோ/அல்-புனைவாகவோ - மாற்றம் அடைகிறது. இங்கு லட்சுமிஹரின் இத்தொகுப்பில் உள்ள 12 கதைகளில் - கடிந்து, ஆம், ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள், சதுக்க பூதம், ஆண்ட்ராய்ட் வெர்ஷன், மன்யாவின் உடல்கள், வெற்றோசை - என்ற ஏழு கதைகள் மேற்சொன்ன மாற்றத்தைத்தான் நிகழ்த்திக் காட்டியுள்ளன.
மேற்கண்ட கதைகளை இவ்வாறு ஒன்றிரண்டு இசங்களுக்குள் அடைத்துவிடும் அதிகாரத் தன்னிலையை நான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில், அர்த்தமென்றும் எழுத்தின் நோக்க மையமென்றும் இதுகாறும் நிலவி வந்த அதிகாரத்தைக் கலைத்துப் போட்டு அர்த்தங்களின் சாத்தியப்பாடுகளை அதிகரித்து மையம் தகர்த்த பின்-நவீனத்துவ 'பாவனை'யையும் இக்கதைகள் மேற்கொள்கின்றன.
எழுதும் பிரதிக்கும் எழுதுபவனுக்குமான உரையாடலாய் நீளும் 'கடிந்து', குழந்தை வரையும் கிறுக்கல்களை மையப்படுத்தி இதுகாறும் நாம் வாழ்வியல் உணர்வுகளில் காலகாலமாகக் கூறி வந்த 'ஆம்'களை இல்லாமல் ஆக்கும் 'ஆம்', ஸ்வீடிஷ் பெண் எழுத்தாளர் ஸெல்மா லாகர்லெவ்வைப் (Selma Lagerlof) பாத்திரமாகக் கொண்டு பனுவல்களை எண்ணங்களின் காடாக (கீயிங்கி காடு) மாற்றும் ரசவாதம் புரியும் 'ஸெல்மா சாண்டாவின் அலமாரிப்பூச்சிகள்', கரிசல் காட்டு கருப்பு மண் பூமியையே பூதமாக்கி நோயுற்ற சிறுவனையும் தாயையும் பலியேற்கும் 'சதுக்கபூதம்', நண்பன் கொடுத்த புதுவித ஃபிளேவர் weedன் வழியேகிய நவீன உலகின் இருளுடனான உரையாடல் நவீன வாழ்வியலுக்கான 'ஆன்ட்ராய்ட் வெர்ஷன்', வயதாகியும் பூப்படையாத 'இருசி'யாகிய மன்யா தனது உடல் பூப்பதற்கான உந்துதல் கொடுக்கும் உடலுக்கான தேடலை ஓவியங்களாக்கி குழந்தை பாலருந்தும் முலைகளுடனான பெண்ணின் உடலை வரையும்போது தான் அதுவரை விலக்கி வைத்த சிவப்பு நிறமே தன் கால்களின் வழி பெருகி ஓடியதைப் பேசும் 'மன்யாவின் உடல்கள்', விரும்பியோ விரும்பாமலோ வேறு ஓர் உணர்வுநிலையில் முயங்கிப் பின் நேர்ந்த வெறுமையின் வழி அவளாகவும் அவனாகவும் நானாகவும் ஒன்றாகிப் போன 'வெற்றோசை' - என்று இக்கதைகள் அனைத்துமே புதிய கதைசொல்லல் முறையைத் தனக்கெனத் தெரிவு செய்து கொண்டுள்ளன.
ஆனால், ஒரு படைப்பாக அல்லது ஒரு வாசிப்பு அனுபவமாக இக்கதைகள் சிலவற்றின் மொழியும் போக்கும் நிறைவைத் தரவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். முன்னுரையில் லட்சுமிஹர் 'ஆண்ட்ராய்ட் வெர்ஷன்' கதையின் மூலமே தனது மொழியை கண்டுணர்ந்து கொண்டதாகக் கூறுவது கவனிக்கத்தக்கது. மேற்படி கதையும் சரி, வெற்றோசை, கடிந்து, ஆம், ஸெல்மா சாண்டாவின் அலமாரிப்பூச்சிகள் கதைகளும் சரி, நகுலன், மௌனி ஆகியோரைப் 'போலச் செய்யும்' முயற்சியாகவே - அவற்றின் நவீனப் பூச்சுடன் - எஞ்சி விடுவதை என்னால் காண முடிகிறது. இக்கதைகளின் மொழி - என்னைப் பொருத்தமட்டில் - ஒரு கட்டத்தில் தட்டையான தன்மையையே/உணர்வையே அளிக்கிறது. ஒரு முயற்சியாக இதை வரவேற்கையில், இன்னும் இப்பாதையில் லட்சுமிஹருக்கான தொலைவு நீண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
எங்கும் வியாபித்திருக்கும் இயற்கையானது இவரது எல்லாக் கதைகளிலும் அவரையும் அறியாமலோ அறிந்தோ ஒரு பாத்திரமாகவே மாறி தனக்கான பங்களிப்பை புனைவில் தானே எழுதிக்கொள்கிறது. தமிழ் வாழ்வியலான திணைமரபின் நீட்சியான 'புலிசாரை' கதையானது மாடும் மாடு சார்ந்த வாழ்வையும், மாட்டை வசக்கி தன்மயப்படுத்தும் வேட்டையின் எச்சமான விளையாட்டையும் அது சார்ந்த வாழ்வியலையும் அழகாகவும் ஒரு நாட்டுப்புறவியல் தன்மையுடனும் காட்சிப்படுத்தியுள்ளது.
'ஆப்பிள் பாக்ஸ்' மற்றும் 'ஸ்டார்' ஆகியவை கதைகளின் தன்மையின் பொருட்டே நேர்கோட்டு எதார்த்த வகைக் கதை சொல்லலைத் தேர்ந்தெடுத்துள்ளன என்று நினைக்கிறேன்.
'காடு மழை தாண்டி', 'இளவரசி ஆயிஷாவின் பலூக்குகள்' ஆகியவை ஏழு கடல், ஏழு மலை தாண்டி வசிக்கும் பச்சைக்கிளியின் உடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் உயிரின் ரகசியத்தை லட்சுமிஹருக்கே உரிய பாணியில் சொல்கின்றன. அம்மா குளிக்கும்போது மோட்டாரை நிறுத்தாமல் விட்டுவிடுவதை அம்மாவின் மொழியில் சொல்லத் தொடங்கி கனிப்பாப்பா சுவர்களில் வரையும் குகைக்குள் சென்று சிங்கக்குடும்பமாகவும் மான்குடும்பமாகவும் உருவகிக்கும் கனிப்பாப்பா மொழிக்குக் கதை தன்னையறியாது நழுவி இறுதியில் மழையை நிறுத்த மோட்டாரை off பண்ணச் சொல்லும் நடப்பியலுடன் முயங்கி மீள்கிறது.
அதே போல் 'ஸ்மைலி' பலூன்கள் - மன்னிக்கவும் - பலூக்குகள் சொல்லும் ஆயிஷாவின் கதையும் ஆயிஷா சொல்லும் பலூக்குகளின் கதையும் வீடு வந்ததும் ஆயிஷாவின் முழிப்பில் பறந்து செல்லும் 'இளவரசி ஆயிஷாவின் பலூக்குகள்' கதையும் தனிச்சிறப்பானதே.
மேற்கண்ட கதைகளிலும் இன்னும் 'ஸ்டார்', 'சதுக்கபூதம்', 'ஆம்' ஆகிய கதைகளிலும் உலவும் குழந்தைகள், சிறுமிகள், சிறுவர்கள் தாங்களே கதைசொல்லிகளாக மாறி கதைகளை சுவர்ச் சித்திரங்களாகவும், ஸ்மைலி பலூன்களாகவும், புள்ள பிடிக்கும் பூத பூமியாகவும் மாற்றிவிடும் லாவகம் லட்சுமிஹருக்கு வாய்த்திருக்கிறது. இதையே இவரது எழுத்தின் தனித்துவமாகக் காண்கிறேன். லட்சுமிஹர் இந்தப் புள்ளியில் மேலும் கூர்ந்து அவதானித்து மெருகடைய முயலலாம்.
'நிரம்பி வழியும் புனிதமென்று எதுவும் இல்லை' என்ற குறிப்பிடத்தக்க அறிக்கையோடு தொடங்கிய லட்சுமிஹர், தனது எழுத்தில் இன்னும் இன்னும் என்று தொடர்ந்த தேடலின் விளைவாகவே இன்று அவர் வந்தடைந்துள்ள சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் விருது நிலை என்று நம்புகிறேன். அவரது பின்னைய கதைகளை வாசித்து அது குறித்து முடிவெடுக்கலாம்.
லட்சுமிஹரின் இம்முதல் தொகுப்பைப் பொருத்தமட்டில், முன்னுரையில் அண்ணன் யவனிகா ஸ்ரீராம் கூறியதை இங்கு வழிமொழிகிறேன் - 'எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன.'
குருத்துகள் பால் பிடித்து பயிர் செழிக்கக் கொஞ்சம் காலம் பிடிக்கும்தானே..!
- நன்றி திரு.அன்புச்செல்வன்
ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள் - Product Reviews
No reviews available

