நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை
நம் இந்தியாவை ஆட்சி செய்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தாத்தா இஸ்லாமியர் என ஒரு இணையத்தள வரலாற்றுப் பக்கத்தில் யாரோ அடையாளம் தெரியாத சிலர் திருத்தம் செய்ய முயற்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி சமீபத்திய வரலாற்றைக் கூட மாற்றிவிட முடியும் என்பதுதான் இங்கு சோகம். பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இங்கு பலரும் வரலாறு மீது அக்கறை காட்டுவது இல்லை. சம காலத்தில் வாழ்ந்து, தொலைக்காட்சியிலோ, நேரிலோ பார்த்தறியாத தலைவர்கள் பலரும் வெறும் பெயர்களாகவே நம் நினைவில் கடந்து போய்விடுகிறார்கள். இப்போதெல்லாம் ‘இந்தியாவின் சிறந்த பிரதமர் என நீங்கள் கருதுபவர் யார்?’ என கருத்துக்கணிப்பு நடந்தால், சமீபத்திய 20 ஆண்டுகளைத் தாண்டி யாரும் போவதில்லை.
உலகின் இளம் நாடுகளில் ஒன்று இந்தியா. சுதந்திரம் அடைந்த இந்த 68 ஆண்டுகளில் மூன்று பெரிய போர்களை சந்தித்திருக்கிறது. அண்டை நாடுகளில் ராணுவ ஆட்சி, கலகம், உள்நாட்டுப் போர் என கொந்தளிப்பான சூழல்கள் நிலவினாலும், இந்தியா ஜனநாயகப் பாதையிலிருந்து எப்போதும் திசை மாறியதில்லை. ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்ற பெருமையோடு முன்னேறிச் செல்கிறோம். இப்படி மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து வாழ்வதற்கு, தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜனநாயக சூழலைப் பெறுவதற்கு கணிசமான பங்களிப்பைச் செய்தவர்கள் நம் பிரதமர்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவாழ்வு சுவாரசியங்களைச் சொல்கிறது இந்த நூல். வரலாற்றையும் தாண்டி அவர்களின் வாழ்க்கையையும் சேர்த்துப் படிப்பது ஒரு இனிய அனுபவமாக இருக்கும்.