இதயம் போற்று
இதயம் போற்று
மனிதக் கரு தோன்றியவுடன் உருவாகும் முதல் உள்ளுறுப்பு இதயம். இது ஒரு சிறப்புத் தசை. இதுவே படிப்படியாக வளர்ந்து, இறக்கும்வரை துடித்து மனிதர்களை இயங்க வைக்கிறது. மூளைதான் உடலை இயக்குகிறது என்றாலும், உடல் முழுவதும் இதயம் ரத்தத்தைச் செலுத்தாவிட்டால், நம் உடல் இயங்கத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மனசு இருக்கும் இடம் மூளையாக இருந்தாலும், இதயம் இருக்கும் பகுதியிலேயே மனசு இருப்பதாக நம்புகிறோம். நமக்குப் பிடித்தமானவரை, காதலிப்பவரை இதய சின்னத்தாலேயே அடையாளப்படுத்துகிறோம்.
இப்படி இதயம் என்பது நம் உடலின் மிக முக்கியமான உள்ளுறுப்பு. அதேநேரம் சமீபகாலமாக இளம் வயதிலேயே மாரடைப்பால், இதய நோய்களால் பலரும் இறப்பது குறித்துக் கேள்விப்படுகிறோம். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதற்கான உண்மைக் காரணங்கள் என்ன என்கிற கேள்வி வலுவாக எழுந்தது. இந்தப் பின்னணியில்தான் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன், ‘இதயம் போற்று’ தொடரை இந்து தமிழ் திசை ‘நலம் வாழ’ இணைப்பிதழில் எழுதத் தொடங்கினார்.
இதய நோய்கள், அந்த நோய்கள் ஏற்படுவதற்குக் காரணங்கள், முன்னெச்சரிக்கையாக எப்படி அந்த நோய்களைத் தடுத்துக்கொள்வது, எப்படி இதயத்தை ஆரோக்கியமாகப் பராமரிப்பது என்பது குறித்து மிக விரிவாக, எல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழிநடையில், தமிழில் தந்தது இந்தத் தொடர். இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்தத் தொடரைப் படித்தால் போதும் எனப் பல வாசகர்கள், மருத்துவர்கள், பிரபலங்கள் பாராட்டியிருந்தார்கள். இப்படிப் பிரபலமடைந்த இந்தத் தொடர் அதன் தேவை கருதி இதோ உடனே புத்தகமாகத் தயாராகிவிட்டது.
டாக்டர் கு.கணேசன் பொதுநல மருத்துவராக இருந்தாலும், பல இதயநல நிபுணர்களுடன் ஆலோசித்து, இந்தத் தொடரை சிறப்புற எழுதியுள்ளார். அவரது நூல்கள், மருத்துவ அறிவியலை மிரட்டாத வகையில் எளிமையாகக் கூறுபவை. அறிவியல் என்பது மக்களின் நலனுக்காகவே என்பதை அவருடைய நூல்கள் பறைசாற்றுகின்றன. இதயப் பாதுகாப்பு குறித்து இவ்வளவு விரிவாக விளக்கும் இது போன்ற நூல், நம் நாட்டில் ஆங்கிலத்தில்கூட வந்திருக்கிறதா என்பதுசந்தேகமே! இந்த நூல் உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதயம் போற்று - Product Reviews
No reviews available

