சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் பாகம் 2

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் பாகம் 2
சித்தர்கள் என்றாலே இன்றும் மனசுக்குள் ஒரு பிரமிப்பு தட்டுகிறது. இரும்பைப் பொன்னாக்குவது, கூடுவிட்டுக் கூடு பாய்வது, நவபாஷாணம் மற்றும் மூலிகைகளால் சிற்பங்கள் உருவாக்குவது, காற்றிலே கலந்து மறைந்திருப்பது, அமானுஷ்யக் குரலில் பேசுவது என்றெல்லாம் அடிப்படை உண்மைக்கு மேலே சித்தர்களைப் பற்றி உருவாகியிருக்கின்றன பல நம்பிக்கைக் கோட்டைகள். அந்த சித்தர்களை மனப்பூர்வமாக உணர்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது அவரவர் அனுபவம். அதனால் சித்தர்கள் மேல் அவர்கள் தனிப்பட்ட கருத்து கொள்ளவும் கூடும். அத்தகைய அனுபவம் இல்லாதவர்கள், சித்தர்களை விமரிசிக்கவும் கூடும். சித்து வேலைகள் செய்பவர்கள் என்று எல்லா சித்தர்களையும் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. அரூபமாக வந்து அற்புதங்களைப் புரியும் ஆனந்த சித்தர்கள் இன்னமும் நம் பூமியில் நிறைந்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் ஏற்கக்கூடியதே. பொதிகை, சதுரகிரி, அத்ரி, திருவண்ணாமலை முதலான மலைப்பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்த சாட்சிகள் நிறைய காணக்கிடைக்கின்றன. இறவா வரம் பெற்றவர்கள் என்று அனுமானிக்கப்படும் சித்தர்கள் இன்றளவும் புனித மலைகளிலும், கோயில்களிலும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது. அப்படி கோயிலில் நடமாடிக்கொண்டிருக்கும் அந்த சித்தர்கள், அந்தந்த கோயில்களைப் பற்றி, அவற்றின் புராதனப் பெருமை பற்றி, அங்கு உறையும் இறைவன்-இறைவி பற்றி தமக்கே உரிய நடையில் பாடல்களாக இயற்றி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாடல்களில், இப்படி கோயில் தன்மைகளை மட்டும் சொல்லாமல், அந்தந்தக் கோயில்களுக்குச் சென்றால் எந்தெந்த தளைகளிலிருந்து விடுபடலாம் என்றும் குறிப்பு கொடுத்திருக்கிறார்கள். தெய்வ நிலையில் வைத்துப் போற்றப்படும் அந்த சித்தர்கள் அவ்வாறு எழுதிவைத்திருக்கும் பாடல்களை, மிகப் பழமையான ஓலைச் சுவடிகளிலிருந்து பத்திரமாக எடுத்து நமக்களிக்கிறார், நாடி ஜோதிட நல்லுரைஞர் கே. சுப்பிரமணியம் அவர்கள். தினகரன் ஆன்மிக மலரில் தொடராக அவர் எழுதிய ‘சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள்’ கட்டுரைகளின் இரண்டாம் தொகுதி இது. * கொல்லூர் மூகாம்பிகையை நவராத்திரியில் விரதம் இருந்து வணங்கினால் கல்வியில் வெற்றி நிச்சயம் என்கிறார் போகர். * வட சென்னை காளிகாம்பாளை எலுமிச்சை விளக்கு ஏற்றி தொழுதால், வராத கடனும் வந்துவிடும் என்கிறார் தாயுமானவர். * காளையார் கோயில் காளீஸ்வரனை பூஜித்து அன்ன தானம் செய்தால், வற்றாத செல்வ வளம் கிடைக்கும் என்கிறார் கொங்கணர். * கோவில்பட்டி பூவனநாதர் - செண்பகவல்லியை வழிபட்டால் மனம் போல மண வாழ்க்கை அமையும் என்கிறார் அகத்தியர். - இப்படி ஒவ்வொரு ஆலயத்திலும் பிரத்யேக வழிபாடுகளுக்கு பலன்கள் ஏராளம் கிடைக்கும். இந்தப் பலன்களைப் பெறும் வழிகளை சித்தர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்த ரகசியங்களைத் தேடி உங்களுக்குத் தருகிறது இந்த நூல்.
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் பாகம் 2 - Product Reviews
No reviews available